search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அமைச்சர்"

    தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை மத்திய அமைச்சர் என குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன்பாகவே கடந்த 16-ந்தேதி சின்னமனூர் அருகே குச்சனூரில் வைக்கப்பட்ட கோவில் கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் எம்.பி என பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

    இதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே எப்படி பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போடலாம் என எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பிறகு அந்த கல்வெட்டு மறைக்கப்பட்டது. அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது தேனி நகர் முழுவதும் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என பெயர் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தேனி நகரில் பல பகுதிகளில் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத்குமார் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் ரவீந்திரநாத்குமார் பெயரோடு மத்தியஅமைச்சர் என சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக ஊடகங்களில் வைரலாகும் சர்ச்சைக்குரிய அழைப்பிதழ்.

    இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழில் ரவீந்திரநாத்குமார் பெயருக்கு அருகில் மத்திய அமைச்சர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிராம மக்கள் சார்பில் அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பாராளுமன்ற உறுப்பினர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சிலர் மாற்றி மத்திய அமைச்சர் என சேர்த்து போலியாக சமூக ஊடகங்களில் பரவவிட்டுள்ளனர்.

    இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதவி வருவதற்கு முன்பாகவே மத்திய அமைச்சர் என பெயரிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டதால் மீண்டும் சர்ச்சையில் ரவீந்திரநாத்குமார் சிக்கியுள்ளார்.
    ×